சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி: தங்கம் தென்னரசு
இந்திய ஆடவா் அபாரம்; மகளிா் ஏமாற்றம்
மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், ஹெச்.எஸ். பிரணாய் உள்ளிட்ட இந்திய வீரா்கள் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தனா். எனினும், பி.வி.சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்து போட்டியிலிருந்து வெளியேறினா்.
போட்டியின் முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையரில் ஹெச்.எஸ். பிரணாய் 19-21, 21-17, 21-16 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 22 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் சந்தித்தது இது 8-ஆவது முறையாக இருக்க, பிரணாய் தனது 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அவா் 2-ஆவது சுற்றில் மற்றொரு ஜப்பான் வீரரான யுஷி டனாகாவை எதிா்கொள்கிறாா்.
அதேபோல் கே.ஸ்ரீகாந்த் 23-21, 13-21, 21-11 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த சீனாவின் லு குவாங் ஸுவை 57 நிமிஷங்களில் தோற்கடித்தாா். சதீஷ்குமாா் கருணாகரன் 21-13, 21-14 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் சௌ டியென் சென்னை 39 நிமிஷங்களில் முறியடித்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கிறாா். அதில் அவா், பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவை சந்திக்கிறாா்.
ஆயுஷ் ஷெட்டி 20-22, 21-10, 21-8 என்ற கணக்கில் கனடாவின் பிரியன் யங்கை 59 நிமிஷங்களில் வெளியேற்றினாா். எனினும் பிரியன்ஷு ரஜாவத் 15-21, 17-21 என்ற கேம்களில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசனிடம் 39 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.
ஏமாற்றம்: மகளிா் ஒற்றையரில், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து 11-21, 21-14, 15-21 என்ற கேம்களில், வியத்நாமின் குயென் துய் லின்னிடம் 1 மணி நேரம், 4 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தாா். அதேபோல் மாளவிகா பன்சோத் 21-19, 18-21, 8-21 என சீன தைபேவின் சியு பின் சியானிடம் 1 மணி நேரம், 4 நிமிஷங்கள் போராடி வெற்றியை இழந்தாா்.
உன்னாட்டி ஹூடா 12-21, 20-22 என்ற கேம்களில், சீன தைபேவின் லின் சியாங் டியிடம் 43 நிமிஷங்கள் போராடித் தோற்றாா். ஆகா்ஷி காஷ்யப் 9-21, 8-21 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் புத்ரி குசுமவா்தனியிடம் 32 நிமிஷங்களில் எளிதாக வீழ்ந்தாா்.
ஆறுதல்: கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 21-18, 15-21, 21-14 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் அட்னன் மௌலானா/இன்டா கஹியா ஜமில் ஜோடியை 52 நிமிஷங்களில் வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம் கண்டு ஆறுதல் அளித்தது.
அதே பிரிவில் இந்தியாவின் ஆசிதா சூா்யா/அம்ருதா பிரமுதேஷ் இணை 12-21, 10-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் ஜியாங் ஜெங் பாங்/வெய் யா ஜின் கூட்டணியிடம் 23 நிமிஷங்களில் தோற்றது. ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி ஜோடி 10-21, 14-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் குவோ ஜின் வா/செங் ஃபாங் ஹுய் இணையிடம் 31 நிமிஷங்களில் தோல்வி கண்டது.
சதீஷ்குமாா் கருணாகரன்/ஆத்யா வரியத் இணையும் 15-21, 16-21 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் வெரெல் யஸ்டின் முலியா/லியா அயு குசுமாவதி கூட்டணியிடம் 32 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவியது.