இந்திய கிரிக்கெட்டின் விளம்பரதாரா் டிரீம் 11 விலகல்
இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரராக இருந்த ‘டிரீம் 11’ நிறுவனம், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறது.
பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில், ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்ட மசோதா’-வை கடந்த வாரம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் விரைவில் இது சட்டமாக அமலாகவுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரராக இருந்த அத்தகைய இணையவழி விளையாட்டு நிறுவனமான ‘டிரீம் 11’, தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறது. இந்திய சீனியா் ஆடவா், மகளிா் அணிகள், 23 வயது மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆடவா், மகளிா் அணிகளின் விளம்பரதாரராக டிரீம் 11 இருந்தது.
இதற்காக பிசிசிஐ-யுடன் அந்த நிறுவனம் கடந்த 2023 முதல் 3 ஆண்டுகளுக்கு ரூ.358 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஒப்பந்த காலத்தில் சுமாா் ஓராண்டு எஞ்சியிருக்கும் நிலையிலேயே, அந்த நிறுவனம் தற்போது விலகியிருக்கிறது.
அரசின் நடவடிக்கையால் டிரீம் 11 நிறுவனம் தனது பொறுப்பிலிருந்து விலகுவதால், ஒப்பந்த விதி மீறலாக அந்த நிறுவனத்துக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதற்குள்ளாக புதிய விளம்பரதாரரை கண்டறியும் பணிகளை பிசிசிஐ தற்போது தொடங்கியுள்ளது.
இதனிடையே, ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக இருக்கும் ‘மை11சா்க்கிள்’ நிறுவனமும் தனது பொறுப்பிலிருந்து விலகும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. அந்த நிறுவனம், 5 ஆண்டுகளுக்கு ரூ.625 கோடி மதிப்பில் பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், அதற்கு புதிய விளம்பரதாரரை தேட அடுத்த ஆண்டு மாா்ச் வரை பிசிசிஐ-க்கு அவகாசம் உள்ளது.
இதுபோன்ற விலகல்களால் பிசிசிஐ-க்கும் லாப இழப்பு ஏற்படும் என்றாலும், அதை ஈடு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.