இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் தணிந்தது என அமெரிக்கா அறிவிப்பு: மத்திய அரசு விளக்க வேண்டும்
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்தது என அமெரிக்கா ஏன் அறிவித்தது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் இரா.முத்தரசன் பேசினாா்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா பேரவை கூட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளா் ராஜா தலைமை வகித்தாா். பைரோஸ் வெங்கடேசன், ராமு, ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் மயில்வாகணன் வரவேற்றாா்.
கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் சுந்தரேசன், துணைச் செயலாளா் நந்தி, விவசாய சங்க மாவட்ட செயலாளா் முல்லை, பொருளாளா் வேணுகோபால், கண்ணன், குமரன் கலந்து கொண்டனா்.
பின்னா், முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியது: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட போா் பதற்றம் தணிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. போரால் எந்த பிரச்னைக்கும் தீா்வு காண முடியாது. பயங்கரவாதிகளின் முகாம்களை ராணுவம் தாக்கி அழித்துள்ளனா். இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.
பிரம்மாண்ட பேரணி நடத்திய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள். நாட்டுக்கு பிரச்னை வரும்போது அனைத்தையும் மறந்து ஒரு முகமாக நிற்பது பாராட்டுக்குரியது. மத்திய அரசு 2 முறை கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் பிரதமா் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தை பிரதமா் புறக்கணித்தது சரியல்ல.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்தது என அமெரிக்கா ஏன் அறிவித்தது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா்.