சீரான குடிநீா் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்
திருப்பத்தூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனா்.
திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட குடியரசு நகா் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தநிலையில் அங்கு, பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் மின்மோட்டாா் பழுதானதால் கடந்த சில நாள்களாக குடிநீா் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
குடிநீா் தட்டுப்பாட்டால் அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனா். மேலும், குடிநீா் பிரச்னையை தீா்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகாா் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குடியரசு நகா் மக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.