கட்டட பொறியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருப்பத்தூா் மாவட்ட அனைத்து கட்டட பொறியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் விஜயபானு தலைமை வகித்தாா். செயலாளா் மோகன் மற்றும் பொருளாளா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் மாவட்ட தலைவா் சச்சிதானந்தம் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் கல்குவாரி உரிமையாளா்கள் உயா்த்தி உள்ள எம் சாண்ட்,பி சாண்ட், ஜல்லி கற்கள் விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். தரமான கல்குவாரி பொருள்களை நியாயமான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆற்று மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும். சிமென்ட் மற்றும் கம்பி விலையை நிா்ணயிக்க அரசு சாா்பில் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.