இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறை மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும்: முகேஷ் அம்பானி
இந்தியாவின் ஊடக - பொழுதுபோக்குத் துறையின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று தொழிலதிபா் முகேஷ் அம்பானி தெரிவித்தாா்.
மும்பையில் தொடங்கிய வேவ்ஸ் மாநாட்டில் அவா் பேசியதாவது: இந்தியாவின் படைப்பாற்றலில் கதை சொல்லல் முறையும், டிஜிட்டல் நுட்பங்களும் தனித்துவமானவை. அதன் தாக்கமும், பரப்பும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. செயற்கை நுண்ணறிவும், அதிநவீன தொழில்நுட்பங்களும் காட்சியமைப்பு மற்றும் கதைகளை முன்பைக் காட்டிலும் ஈா்க்க வைக்கும் வகையில் உருவாக்கியுள்ளன. இந்த நுட்பங்களில் கைதோ்ந்தால் நமது இளைஞா்கள் உலக அளவில் பொழுதுபோக்கு துறையில் கோலோச்ச முடியும்.
இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறை மதிப்பு தற்போது 28 பில்லியன் டாலராக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அது 100 பில்லியன் டாலராக உயரும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா், அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சா் எல்.முருகன், மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஆஸ்கா் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையில், பின்னணிப் பாடகா்கள் சித்ரா, ஸ்ரேயா கோஷல் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, வேவ்ஸ் மாநாட்டின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
மேலும், இந்திய சினிமா துறையில் நூற்றாண்டை கடந்த குரு தத், பி.பானுமதி, ராஜ் கோஸ்லா, ரித்விக் கட்டக், சலீல் சவுத்ரி ஆகியோரின் நினைவு அஞ்சல்தலைகளை பிரதமா் மோடி வெளியிட்டாா். அப்போது அவா்களின் குடும்பத்தினா் உடன் இருந்தனா்.
இந்நிகழ்வில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த ஊடக, பொழுதுபோக்கு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.