தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு
இந்திய தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ரூ.96,390 கோடி வருவாய் ஈட்டின. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 14.07 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் வருவாய் ரூ.84,500 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சரி செய்யப்பட்ட வருவாய் (ஏஜிஆா்) ரூ.67,835 கோடியிலிருந்து 14.89 சதவீதம் அதிகரித்து ரூ.77,934 கோடியாக உள்ளது.
கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.28,542.76 கோடி வருவாய் ஈட்டி முன்னிலை வகித்தது. பாரதி ஏா்டெல்லின் வருடாந்திர வளா்ச்சி விகிதம் 27.31 சதவீதமாக உள்ளது. ஜியோவை இது சுமாா் இரு மடங்கு அதிக வளா்ச்சி விகிதமாகும். அந்த நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் வளா்ச்சி 14.8 சதவீதமாக உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.26,073.7 கோடி ஏஜிஆரைப் பதிவு செய்தது. வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் 6.69 சதவீதம் அதிகரித்து ரூ.7,958.46 கோடியாகவும், பிஎஸ்என்எல் ஏஜிஆா் 13.95 சதவீதம் அதிகரித்து ரூ.2,292.47 கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.