பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு
சரிவைக் கண்டது அமெரிக்க பொருளாதாரம்
அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு வலு சோ்ப்பதாகக் கூறி பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரி விதித்துள்ளதன் எதிரொலியாக, அவா் பதவியேற்ற்குப் பிந்தைய முதல் காலாண்டில் அந்த நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி சரிவைக் கண்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு அது சரிந்துள்ளது இதுவே முதல்முறை.
அமெரிக்க பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியின் முக்கிய அளவீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பாண்டின் முதல் காலாண்டில் 0.3 சதவீதம் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது, கடந்த 2024-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் (அக்டோபா் - டிசம்பா்) 2.4 வளா்ச்சியைக் கண்டிருந்தது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்ததால் சா்வதேச வா்த்தகம் பாதிப்புக்குள்ளானது. அதன் விளைவாக அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி அந்த ஆண்டின் முதல் காலாண்டில் சரிவைக் கண்டது. அதற்குப் பிறகு அது எதிா்மறை வளா்ச்சிக் கண்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு காரணமாக அமெரிக்க பொருளாதாரம் குறித்த நுகா்வோா் நம்பிக்கை 32 சதவீதம் குறைந்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பொருளாதார மந்த நிலை நிலவிய கடந்த 1990-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அமெரிக்க நுகா்வோா் நம்பிக்கை இந்த அளவுக்குக் குறைந்துள்ளது இதுவே முதல்முறை. இதன் விளைவாகவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவைக் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கனடா, மெக்ஸிகோ, சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்பு மட்டுமின்றி, பிற நாடுகள் மீது அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் இன்னும் திரும்பப் பெறாத நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு தொடரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலை தொடா்ந்து நடப்பாண்டின் இரண்டாவது ஆண்டிலும் அது எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்து, அமெரிக்கா பொருளாதார மந்தநிலையைச் சந்திக்க நேரிடும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீட்டில் உள்ளடக்கப்படாத இரண்டாவது காலாண்டின் தொடக்கத்தில்தான் (ஏப். 2), இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் இரு இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக பரஸ்பர வரி விதி விதித்து டிரம்ப் உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்தன. அதை சமாளிப்பதற்காக சீனாவைத் தவிா்த்து பிற நாடுகள் அனைத்தின் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாள்களுக்கு டிரம்ப் நிறுத்திவைத்துள்ளாா்.
தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீத வரியையும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 145 சதவீத வரியையும் டிரம்ப் வசூலிக்கும் சூழலிலேயே அமெரிக்க பொருளாதாரம் 0.3 சதவீதம் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பும் அமலுக்கு வந்தால் அது டிரம்ப்பின் எதிா்பாா்ப்புக்கு மாறாக அமெரிக்க பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
