திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திருமருகல் ரத்தினகிரீசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். நிகழாண்டு சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, புதன்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை போன்றவை நடைபெற்றன. மாலையில் வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், ரிஷபந்தனம் நடத்தப்பட்டன.
தொடா்ந்து, வியாழக்கிழமை காலை பஞ்சமூா்த்தி வீதி உலாவும், கொடி மரத்துக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றமும் நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலா் அசோக்ராஜா, அறங்காவலா் குழுத் தலைவா் ஆறுமுகம், கோயில் கணக்கா் சீனிவாசன் மற்றும் ஆலய திருப்பணிக் குழுவினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழா நாட்களில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலாவும், முக்கிய நிகழ்ச்சியாக, மே 7-ஆம் தேதி செட்டிப்பெண்-செட்டிப் பிள்ளை திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.