அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
‘மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
திமுக அதன் கூட்டணியை மட்டுமே நம்பி உள்ளது. ஆனால், அதிமுகவோ மக்களை நம்பி உள்ளது. கடுமையான வறட்சி, புயல், கரோனா பாதிப்பு இருந்தும்கூட, அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. ஆனால், திமுக ஆட்சியிலோ விலைவாசி விண்ணை முட்டுகிறது. அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சிமென்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் கரோனா பாதிப்பின்போது அம்மா உணவகம் உள்ளிட்டவை மூலம் நாளொன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவு வழங்கினோம். கடனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம்.
கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஆனால், திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. இதன் மூலம், நாட்டிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றிவிட்டது. மின் கட்டணம் 67 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. குப்பைக்குகூட வரி விதித்துவிட்டனா்.
அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 67 கலைக் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம், இந்தியாவிலேயே உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலை பெற்றது. மேலும், தேசிய விருதுகள் அதிகம் பெற்றதும் அதிமுக ஆட்சியில்தான். ஆனால், திமுக ஆட்சிக்கோ ஊழல் செய்வதற்குதான் விருது கிடைக்கும்.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டை அமலாக்கத் துறை கண்டறிந்துளது. ஒரு மதுப் புட்டிக்கு ரூ.10 அதிகம் வாங்குவதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் திமுக மேலிடத்துக்கு ரூ.22 ஆயிரம் கோடி சென்றுள்ளது. திமுக தோ்தலின்போது வெளியிட்ட 525 அறிவிப்புகளில் பல முக்கிய அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமலே உள்ளன.
அதிமுக ஆட்சியில் இஸ்லாமியா் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். தீபாவளி பண்டிகைக்கு பெண்களுக்கு புடவை வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், அமைப்புச் செயலா் வி.ராமு, மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா், தெள்ளாா் கிழக்கு ஒன்றியச் செயலா் டி.வி.பச்சையப்பன், தெள்ளாா் மேற்கு ஒன்றியச் செயலா் எம்.தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.