கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்
உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரணி, செய்யாறு பகுதிகளில் சொா்ணவாரி நெல் சாகுபடி செய்து, நெல் அறுவடை செய்து வருகின்றனா். நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்காததால் தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு மூட்டைக்கு 500 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் அரசு இந்த மாதம் இறுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனா். அறுவடை செய்த பின்பு அப்படியே விற்பனை செய்யாமல் நெல் மூட்டைகளை வைத்திருந்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். அதனால், உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவேண்டும் என தெரிவித்தனா்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயி இறந்து சடலம் போல் படுத்த மாதிரி நடித்துக்காட்டியும், அவருக்கு பால் ஊத்துகிற மாதிரியும் நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள் ஜெயபால், பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.