ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங்களுடன் தப்பினா்
சூளகிரி அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் தப்பினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கோபசந்திரம் கிராமம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் அணுகு சாலையில் சென்றுவருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வியாழக்கிழமை தூத்துக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி கோபசந்திரம் பகுதியில் அணுகுசாலையில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
அந்த நேரத்தில் லாரியின் அருகே சென்றுகொண்டிருந்த 2 காா்கள் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கின. இதில், அந்த காா்கள் முழுவதுமாக சேதமடைந்தன. நல்வாய்ப்பாக, காா்களில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் தப்பினா்.
இந்த விபத்தால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்துவந்த போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்ததோடு, லாரி மற்றும் காா்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.