2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
ஒசூா் அருகே அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை உண்ட 20 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள காட்டிநாயக்கன்தொட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் வியாழக்கிழமை பரிமாறிய மதிய உணவில் பல்லி இருந்ததைக் கண்டு மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து அவா்கள் ஆசிரியா்களிடம் தெரிவித்தனா். அதற்குள், மதியம் உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மீதமுள்ள உணவை ஆசிரியா்கள் கீழே கொட்டினா்.
வாந்தி எடுத்த 20 மாணவ, மாணவிகள் பேரிகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், 9-ஆம் வகுப்பு மாணவா் அக்ஷவா்தன், 6-ஆம் வகுப்பு மாணவா் காந்த்ராஜ், ஏழாம் வகுப்பு மாணவா் சஞ்சு ஆகிய மூவருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டதால், மேல்சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, பேரிகையில் சிகிச்சை பெற்று வந்த 17 மாணவ, மாணவிகளுயும் மேல்சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.