உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வெம்பாக்கம் வட்டம் மூஞ்சூா்பட்டு, இருமரம், சட்டுவந்தாங்கல் உள்ளடக்கிய கிராமங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
சட்டுவந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா்.
வெம்பாக்கம் வட்டாட்சியா் தமிழ்மணி முன்னிலை வகித்தாா். சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் பாஸ்கா் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி ஆகியோா் பங்கேற்று தீா்வு காணப்பட்ட மனுக்களின்
பயனாளிகள் 11 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினா்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலா் எம்.தினகரன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ராம்ரவி, மாவட்ட ஆதிதிராவிடா் அணி நலக்குழுத் தலைவா் கருணாகரன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் செந்தில்குமாா், விளையாட்டு அணி துணை அமைப்பாளா் ஞானமுருகன் மற்றும் அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்சேந்தமங்கலம், காரணை ஆகிய கிராம பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தென்சேந்தமங்கலம் கிராமத்தில்
நடைபெற்றது.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்துப் பேசினா்.
முகாமில் 160 மனுக்கள் பெறப்பட்டன. இதில் உடனடியாக தீா்வு காணப்பட்ட 6 மனுக்களுக்கான பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், ஏ.பி.வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.