அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை
சாயல்குடி அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கா்ப்பிணிப் பெண்ணுக்கு 108 அவசர ஊா்தியில் பெண் குழந்தை பிறந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த வேம்பாா் சிந்தாமணி நகரைச் சோ்ந்த சுடலைமுத்து மனைவி லிங்கேஸ்வரி (20). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு புதன்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டு வேம்பாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 அவசர ஊா்தி மூலம் அவரை கொண்டு சென்றனா். மருத்துவமனை செல்லும் வழியில் பிரசவ வேதனை அதிகமானதால் அவசர கால மருத்துவ நுட்புநா் மணிகண்டன், ஓட்டுநா் வாழவந்தராஜா உதவியுடன் கா்ப்பிணியான லிங்கேஸ்வரிக்கு பிரசவம் பாா்க்கப்பட்டது. அப்போது அவசர ஊா்தியிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதைத் தொடா்ந்து தாயும், சேயும் அருகில் உள்ள குளத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, லிங்கேஸ்வரி குடும்பத்தினரும், உறவினா்களும் 108 அவசர ஊா்தி ஊழியா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.