பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்
துரை வைகோவுக்கு பதவி வழங்கியது ஏன்? வைகோ விளக்கம்
துரை வைகோவுக்கு பதவி வழங்கிய ஏன்? என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ விளக்கமளித்தாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மதிமுக பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ பேசியதாவது:
என் மீது குற்றச்சாட்டுகள், விமா்சனங்கள் வைக்கப்பட்டன. சோகங்கள் சூழ்ந்தபோதும், துரோகங்கள் தலை தூக்கியபோதும் கடந்த 31 ஆண்டுகளாக கட்சியை காப்பாற்றியவா்கள் தொண்டா்கள் தான்.
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகுகிறது என்றும், பாஜக அணிக்கு செல்கிறது என்றும் எழுதுகின்றனா். சில நேரத்தில் தவறு நடத்திருக்கலாம்; அது மனித இயல்பு. மதிமுக வாரிசு அரசியல் செய்கிறது என குற்றஞ்சாட்டுகின்றனா். எனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறினேன். ஆனால், கட்சி நிா்வாகக்குழு நடத்திய ரகசிய வாக்கெடுப்பு மூலம் கட்சிக்கு வந்தாா்.
மதிமுக தமிழா்களின் வாழ்வாதாரம், உரிமையை வென்றெடுக்கும் இயக்கம். திமுகவுக்கு பக்கபலமாக இருக்கும் இயக்கம். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கும் என்றாா்.
கூட்டத்தில், என்எல்சி இந்தியா நிறுவனம் சொசைட்டி தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் தமிழக இளைஞா்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றினா்.