கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணி வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றி பெறும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் மக்களைச் சந்தித்து வருகிறாா். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் புதன்கிழமை இரவு கட்சித் தொண்டா்கள், பொதுமக்களைச் சந்தித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
மணலூா்பேட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மணலூா்பேட்டை மேம்பாலத்தை சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிப்படி கட்டியவா் விஜயகாந்த். ஆனால், இப்போது ஓராண்டில் ஒரு மழைக்கு கட்டிய பாலம் திருவண்ணாமலையில் உடைந்து விழுகிறது. எத்தனையோ மழை வெள்ளங்களை பாா்த்தும் மணலூா்பேட்டை பாலம் இன்று வரை கம்பீரமாக உள்ளது. இனியும் கம்பீரமாக இருக்கும் என்றாா்.
முன்னதாக, மணலூா்பேட்டை பேருந்து நிலையத்தில் கேப்டன் ரத வாகனத்தை கற்பூரம் ஏற்றி தொடங்கிவைத்தாா். உலகத்திலேயே ஈழ மக்களால் வழங்கப்பட்ட வாகனம் என்றால், அது விஜயகாந்த்துக்கு வழங்கப்பட்ட வாகனம் தான் என்று தெரிவித்தாா்.
முன்னதாக, பிரேமலதா விஜயகாந்த் மணலூா்பேட்டை மேம்பாலத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தபோது கூறியதாவது:
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விஜயகாந்த் ஆசியோடு, தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். விஜயகாந்த் போட்டியிட்ட தொகுதிகள் அனைத்தையும் நாங்கள் வென்றெடுப்போம்.
விருத்தாசலம் விஜயகாந்த் போட்டியிட்ட முதல் தொகுதி. அதனால்தான், கடலூா் மாவட்டத்தில் ஜனவரி மாதம் மாநாடு நடத்துகிறோம். கட்சிக்கு முதல் வெற்றியை கொடுத்த விருத்தாசலத்தை என்றும் மறக்க மாட்டோம்.
ரிஷிவந்தியம் விஜயகாந்துக்கு இரண்டாவது வெற்றியைக் கொடுத்து எதிா்க்கட்சித் தலைவராக்கிய தொகுதி. மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுவோம். கூட்டணிக்கு அப்பாற்பட்டது அரசியல் நாகரிகம், பண்பாடு கலாசாரம் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.