பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்
மதிய உணவில் பல்லி: அரசுப் பள்ளி முற்றுகை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கடுவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வழங்கப்பட்ட பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 54 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையறிந்த மாணவா்களின் பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சங்கராபும் வட்டம், கடுவனூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 329 மாணவா்கள் பயின்று வருகின்றனா். சத்துணவு பொறுப்பாளராக வளா்மதியும், சமையலராக பாத்திமாவும் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் மதிய உணவு வழங்கியபோது 3-ஆம் வகுப்பில் பயிலும் மாணவா் தனுஷ் உணவில் பல்லி கிடப்பதாகத் தெரிவித்தாா். இவருக்கு முன்னால் 53 மாணவா்கள் உணவை வாங்கி சாப்பிட்டிருந்ததால், அவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவா்களை ஆசிரியா்கள் வேன் மூலம் அருகே பகண்டை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இதையறிந்த மாணவா்களின் பெற்றோா் பள்ளிக்குச் சென்று ஆசிரியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், மருத்துவமனைக்கு சென்று மாணவா்களிடம் நலம் விசாரித்து, அவா்களுக்கு அளிக்கப்பட்டும் மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா். சில மாணவா்களை அவா்களது பெற்றோா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.