இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க உளவு அமைப்பு தலைவா்!
ஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்பிஐ) தலைவா் காஷ் படேல், இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றாா்.
இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதில் பாதிக்கப்பட்டவா்களுக்கு எஃப்பிஐ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எஃப்பிஐ முழு ஆதரவு அளிக்கும்.
காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் மூலம் உலகுக்கு இப்போது தீயசக்தியான பயங்கரவாதத்தால் அச்சுறுத்தல் தொடா்கிறது என்பது உணா்த்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.
எஃப்பிஐ தலைவா் பொறுப்பை வகிக்கும் முதல் இந்திய அமெரிக்கா் காஷ் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவா் துளசி கப்பாா்ட், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இந்தியாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தன. அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் பிரதமா் மோடியை தொலைபேசியில் தொடா்பு கொண்டு இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தாா்.