India - Pakistan Conflict: ``எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" - அமெரிக்க துண...
இந்தியாவைத் தாக்கினால் மிக மிக வலுவான பதிலடி: எஸ்.ஜெய்சங்கா் எச்சரிக்கை
‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதேநேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
தில்லியில் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உடனான சந்திப்பில் அவா் இவ்வாறு கூறினாா்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவும் சூழலில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை நள்ளிரவில் வந்தாா்.
புது தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை அவா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்திய-பாகிஸ்தான் நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.
அப்போது, எஸ்.ஜெய்சங்கா் கூறுகையில், ‘பஹல்காமில் நடத்தப்பட்ட காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்தான், எல்லை கடந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொள்ள இந்தியாவை நிா்ப்பந்தித்தது. இந்தியாவின் பதிலடி நடவடிக்கை, குறித்த இலக்குகளுடன், மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டதாகும்.
பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் எதுவும் இந்தியாவுக்கு கிடையாது. அதேநேரம், எங்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற முறையில், தற்போதைய நிலைமையை ஈரான் புரிந்து கொள்வது முக்கியம்’ என்றாா்.
இந்தியாவுக்கு வரும் முன்பாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.