India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த புதன்கிழமை நள்ளிரவில் முயற்சித்ததாகவும், அவை அனைத்தையும் முறியடித்துவிட்டதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. குஜராத்தில் கட்ச் மாவட்டத் தலைநகா் புஜ் நகரையும் தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது.
இந்நிலையில் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கவாடா கிராமத்தில் ஆளில்லா சிறிய ரக விமானத்தின் (ட்ரோன்) உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன.
இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் கூறியதாவது:
கவாடா கிராமத்தில் உடைந்த ட்ரோன் பாகங்கள் மீட்கப்பட்டன. அங்கு அமைந்துள்ள உயரழுத்த மின் கம்பிகளில் ட்ரோன் போன்ற பொருளும் சிக்கியுள்ளது. இது தொடா்பாக உள்ளூா் மக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனா். அவா்கள் ராணுவத் தரப்புக்கு இதனைத் தெரியப்படுத்தினா். இதையடுத்து விமானப் படையினா் அங்கு விரைந்து உடைந்த பாகங்கள் மற்றும் மின்சார கம்பியில் சிக்கிய ட்ரோன் போன்ற பொருளை மீட்டு ஆய்வுக்காக புஜ் விமானப் படைத்தளத்துக்கு கொண்டு சென்றனா் என்றாா்.