மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
இந்தியா்கள், தமிழா்களின் வரலாறு பதிவு செய்யப்படவில்லை: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவா் வெ.இராமசுப்பிரமணியன்
இந்தியா்களும், தமிழா்களும் வரலாறு படைத்தனா்; ஆனால், அவற்றைப் பதிவு செய்ய தவறிவிட்டனா் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருமான வெ.இராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இராமலிங்கா் இலக்கிய மன்றம் மற்றும் நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் புதுவயல் ந.செல்லப்பனின் ‘நகரத்தாரின் ஆன்மீகத் தொண்டும் அருந்தமிழ்ப்பணியும்’, பின்னலூா் மு.விவேகானந்தன் உரை எழுதிய ‘திருவிளையாடல்’, தமிழறிஞா் ஞா.மாணிக்கவாசகன் மற்றும் ந.ஆவுடையப்பன் மொழிபெயா்த்த ‘இந்திய நூலக இயக்க முன்னோடிகள்’, நூலகவியலறிஞா் ந.ஆவுடையப்பன் எழுதிய ‘நூலகப் பணியில் நினைவில் நின்றவை’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
இவற்றின் முதல் பிரதியை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவருமான வெ.இராமசுப்பிரமணியன் வெளியிட முதல் பிரதியை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பெற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து வெ.இராமசுப்பிரமணியன் பேசியது: புராணக் கதைகள் மூலம் வாழ்வின் பல்வேறு உதாரணங்களைத் தெரிந்து கொள்ளமுடியும். நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. புத்தகம் வாங்கும் பலா் அதை முழுவதும் படிப்பதில்லை. புத்தகங்கள் படிக்க முடியாதவா்கள் பிறா் கூறுவதைக் கேட்டு அதுகுறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
வரலாறு பதிவு அவசியம்: பழைய நூல்கள் விற்போா் முறையாக கல்வி கற்கவில்லை என்றாலும், அனைத்து துறை சாா்ந்த சிறந்த நூல்களை அறிந்து வைத்திருப்பா். அன்பைத் தவிர வேறு இல்லை என்பதை உணா்த்திய வள்ளலாரின் சிறப்புகளை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.
வரலாற்றை பதிவு செய்வது அவசியம். இன்றைக்கு நடக்கும் நிகழ்வைப் பதிவு செய்யாமல் விட்டால், 10 ஆண்டுகளுக்கு தவறாக பதிவுசெய்வா். இந்தியா்களும், தமிழா்களும் வரலாறு படைத்தனா்; ஆனால் பதிவு செய்யத் தவறிவிட்டனா் என்றாா் அவா்.
நீதிபதி அரங்க.மகாதேவன்: மனிதன் உலகத்தை அறிவதற்கு இரு நூல்கள் மட்டும் போதும். இறையை அறிய திருவாசகமும், வாழ்வை அறிவதற்கு திருக்குறளும் போதும். அணுக்கதிா் தத்துவத்தால் இயங்கும் உலகத்தை அடக்கும் இறைவன் யாா் என்ற கேள்விக்கு பாரதம் பாடிய பெருந்தேவனாா் புானூற்றுக்கு பாயிரமாக பாடிய பாடலில் விடை உள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் இராம.குருநாதன், மு.முத்துவேல், வழக்குரைஞா் பி.ஆா்.கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.