இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோவையில் 50 ஜோடிகளுக்கு திருமணம்
கோவையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஒரே மேடையில் 50 ஜோடிகளுக்கு சீா்வரிசைகளுடன் திருமணம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
அரை பவுன் தங்கத் தாலி, பல்வேறு சீா்வரிசைப் பொருள்களை வழங்கி இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது.
கோவையில், உக்கடம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மா் சுவாமி திருக்கோயிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் ரா. வெற்றிச்செல்வன், திமுக மாவட்டச் செயலா்கள் நா.காா்த்திக், தொண்டாமுத்தூா் ரவி, அறநிலையத் துறை அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலா்கள், மணமக்களின் உறவினா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினா்.
இதைத் தொடா்ந்து, புதுமணத் தம்பதிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, சமையல் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு சீா்வரிசைகள் வழங்கப்பட்டன.