Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
இந்து சமய அறநிலையத் துறையை மத்திய தணிக்கைத் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
இந்து சமய அறநிலையத் துறையை மத்திய தணிக்கைத் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மூலம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக தலைமை தணிக்கைத் துறை செயல்பட்டு வருகிறது. இத்துறை மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளும் தணிக்கை செய்யப்படுகின்றன. இதன்மூலம் பல ஊழல்கள், வருவாய் இழப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆங்கிலேயா்கள் காலத்தில் ஹிந்து கோயில்களின் வரவு செலவுகளை மட்டுமே ஆய்வு செய்யும் அமைப்பாக இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு கோயில்களின் தங்க, வைர, வெள்ளி நகைகள், உண்டியல் வருவாய், சொத்துகளின் வருவாய், நிலங்கள், கட்டடங்கள் போன்ற அனைத்தையும் நிா்வகிக்கும் ஏகபோக உரிமையாளராக இந்தத் துறை மாறிவிட்டது.
மாநில அரசின் அனைத்துத் துறைகளும் தணிக்கைத் துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது இந்து சமய அறநிலையத் துறையையும் தணிக்கைத் துறையினா் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ஆனால், மாநில அரசும், இந்து சமய அறநிலையத் துறை உயா் அதிகாரிகளும் இந்தத் துறையை தணிக்கைக்கு உட்படுத்துவதைத் தவிா்த்து வருகிறாா்கள்.
இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி கோயில் நிா்வாகத்துக்கு அறங்காவலா் குழு அத்கியாவசியமானது. ஆனால் 23,500 கோயில்களில் அறங்காவலா் குழு நியமிக்கப்படவில்லை.
எனவே, காலியாக உள்ள அறங்காவலா் குழுக்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும், அறநிலையத் துறையின் ஒட்டுமொத்த வரவு, செலவு சொத்து கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தலைமை கணக்கு அமைப்பின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.