சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
இந்தோனேசியாவில் பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம்! அதிபர் அறிவிப்பு!
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான காஸா மீதான போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், காஸாவிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும், ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோர் மற்றும் குடும்பங்களை இழந்தும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவ்வாறு பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்கவும் அவர்கள் விரும்பினால் காஸாவிலிருந்து அவர்களை இந்தோனேசியாவுக்கு அழைத்து வருவதற்கு தங்களது அரசு விமானங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்காலம் மட்டுமே வழங்கப்படும் என்றும் இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகளுடன் ஆலோசிக்க இந்தோனேசியாவின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிபர் சுபியாந்தோ கூறுகையில், காஸாவில் படுகாயமடைந்த பாலஸ்தீனர்களில் முதல் குழுவாக 1000 பேர் தனி விமானங்கள் மூலம் இந்தோனேசியாவிற்கு அழைத்து வர அரசு தயாராகவுள்ளதாகவும், அவர்களது காயங்கள் குணமாகி காஸாவிற்கு திரும்பச் செல்ல பாதுகாப்பான சூழல் உருவான பின் தங்களது தாயகத்துக்கு அவர்கள் மீண்டும் அனுப்பப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, துருக்கி, எகிப்து, கத்தார், ஜோர்டான் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் சுபியாந்தோ அந்நாட்டு தலைவர்களுடன் பாலஸ்தீன மக்களுக்கான இந்தத் திட்டத்தைப் பற்றி ஆலோசிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதில், சில நாடுகளின் அரசுகள் மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களை தங்கள் நாட்டுக்குள் ஏற்கனவே அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? சிம்ப்ஸன்ஸ் கார்ட்டூன் கணிப்பு கூறுவதென்ன?!