தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்; நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்ட பக்தர்கள்!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருவார்கள்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனைத் தரிசித்து, அக்கினிச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்தி அம்மனை வணங்கி வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகளும் தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, திருநெல்வேலி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டது.

இந்தாண்டுக்கான ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
ஆடி கடைசி வெள்ளி திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நேற்று மதியம் 2 மணிக்கு மேல் உற்சவ அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்னதாக அதிகாலையில் 3 மணிக்கு அம்மனுக்குப் பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இருக்கன்குடி பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.