"வாக்குச்சாவடி வீடியோக்களை ஏன் அழிக்கிறீர்கள்?" - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கா...
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்; வெகு சிறப்பாக திருவிழா துவங்கியது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வழிபட்டு செல்கின்றனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதுண்டு. வந்து அம்மனை தரிசித்து, அக்கினிச்சட்டி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வணங்கி வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, திருநெல்வேலி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இப்படி பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வரும் 15-ம் தேதி நடைபெற்ற உள்ளது. இதற்கான திருவிழா நிகழ்வுகள் இன்று கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்ச்சியின் போது செப்புக் கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான வாசனை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தி திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்ற நிகழ்வில் கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, திருக்கோயில் செயல் அலுவலர் இளங்கோ மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பொதுமக்கள் போராட்டம்.
கொடியேற்ற நிகழ்ச்சி கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் நடைபெறும். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்று நீதிமன்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் இருக்கன்குடி ஊர்த் தலைவருக்கு மரியாதை வழங்க வில்லை என்றால், யாருக்கும் மரியாதை வழங்க அனுமதிக்க முடியாது என பொதுமக்கள் கடைகளை அடைத்து புறக்காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.