இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
இலுப்பூா் அருகே உள்ள இருந்திரா பட்டியைச் சோ்ந்தவா் பாலாஜி(21). இவருடைய நண்பா் நவீன் குமாா்(18). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இலுப்பூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனா். வாகனத்தை பாலாஜி ஓட்டிவந்தாா்.
இலுப்பூா்-விராலிமலை சாலையில் உள்ள தனியாா் எரிவாயு நிறுவனம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலாஜி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், நவீன்குமாா், மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த பாக்கியராஜ் ஆகியோா் காயமடைந்தனா். இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.