இலுப்பூா் அருகே ஜல்லிக்கட்டு: காவல் ஆய்வாளா் உள்பட 19 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், காவல் ஆய்வாளா் உள்பட 19 போ் காயமடைந்தனா்.
இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது. போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
முதலில், கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டன. தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 720 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 253 வீரா்கள் எட்டுக் குழுக்களாக பிரித்து களமிறக்கப்பட்டனா்.
பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் மாடுகள் முட்டியதில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல் ஆய்வாளா் சந்திரசேகா் (56) மற்றும் பாா்வையாளா்கள், மாடுபிடி வீரா்கள் என மொத்தம் 19 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு திடல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை தேவைப்பட்ட காவல் ஆய்வாளா் சந்திரசேகா் உள்ளிட்ட 4 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். போட்டியில் பங்கேற்று காயமடைந்த 4 காளைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒரு காளை தீவிர சிகிச்சைக்காக ஒரத்தநாடு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பாதுகாப்புப் பணியில் டிஎஸ்பி. முத்துராஜா தலைமையில் 135 போலீஸாா், ஊா்காவல் படையினா் ஈடுபடுத்தப்பட்டனா்.
காளை உயிரிழப்பு: முன்னதாக, திருச்சி மாவட்டம், சாத்தனூா் உலகநாதன் என்பவரின் காளை வாடிவாசலுக்கு அழைத்து வரும்போது இரும்புத் தடுப்பில் தலை மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.


