`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!
``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நெல்லையின் அடையாளமாக 'இருட்டுக்கடை' என்ற பெயரில் செயல்படும் அல்வா கடை மாறியுள்ளது. அதன் உரிமையாளரான கவிதாவின் மகள் கனிஷ்கா, கோவையைச் சேர்ந்த தொழிலதிபரான யுவராஜ் சிங் என்பவரின் மகன் பல்ராம் சிங் ஆகியோரிடையே கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரமாண்டமான வகையில் இந்த திருமணம் நடந்த நிலையில், தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்ததாக மணப்பெண் கனிஷ்கா காவல்துறை ஆணையர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக கனிஷ்கா தனது தாயுடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அதை மறைத்து என்னைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரும் அந்தப் பெண்ணின் தொடர்பைத் துண்டிக்கவில்லை. அந்தப் பெண்ணை கோவையில் உள்ள வீட்டுக்கே அழைத்து வந்தார். அதைத் தட்டிக் கேட்டதற்காக என்னிடம் தினமும் சண்டையிட்டார். என்னிடம் வாக்குவாதம் செய்ததோடு அடித்து உதைத்தார். என்னை வீட்டு வேலைக்காரியை விடவும் மோசமாக நடத்தினார். இருட்டுக்கடையை தனது பேருக்கு மாற்றிக் கொடுத்தால் மட்டுமே என்னோடு வாழ்க்கை நடத்த முடியும் என மிரட்டினார்.
என் வீட்டில் இருந்து வரதட்சணையாக இருட்டுக்கடையை மட்டுமல்லாமல் பணம், நகையை வாங்கி வருமாறு தினமும் டார்ச்சர் செய்தார். இது பற்றி எனது அம்மா, அப்பாவிடம் ஏதாவது தெரியப்படுத்தினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அதனால் நான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருந்தேன். ஆனால், கொடுமை அதிகமானதால் மார்ச் 15-ம் தேதி கோவையில் இருந்து நெல்லைக்கு அவர்கள் வீட்டு காரிலேயே அனுப்பி வைத்துவிட்டார்கள். நான் இங்கே வந்த பிறகும் என்னுடன் போனில் தொடர்புகொண்ட என் கணவர் பல்ராம் சிங் மிரட்டல் விடுத்தார். அத்துடன், வாட்ஸ்அப் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்" என்று கண்ணீருடன் பேசினார்.

இது தொடர்பாக கனிஷ்கா தன் தந்தை ஹரிசிங், தாயார் கவிதாவுடன் நெல்லை மாநகர காவல் துறை ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அத்துடன், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் இணையம் வாயிலாக புகார் அளித்தார். பின்னர் பேசிய கனிஷ்காவின் தாயார் கவிதா, "நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பியே என் மகளை பல்ராம் சிங்குக்கு திருமணம் செய்து கொடுத்தேன். ஆனால் திருமணமான அன்று மாலையே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கார் கேட்டார். அப்போதே நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். ஆனாலும் என் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதால் அதைப் பெரிதுபடுத்தாமல் காரை வாங்க ஏற்பாடு செய்தேன். தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான அந்த கார் ரெஜிஸ்டிரேசனுக்காக காத்திருக்கிறது.
என் மகளை தினமும் டார்ச்சர் செய்திருக்கிறார்கள். திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இது பற்றி எங்களிடம் தெரிவித்தால் அவளைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. மாமனாரிடம் கனிஷ்கா இதுபற்றி சொன்னதற்கு அவரும் கண்டுகொள்ளவில்லை. டார்ச்சர் அதிகமானதால் என் மகள் இதுபற்றி எங்களிடம் சொன்னாள். நாங்கள் அவரிடம் பேசியபோது, உடனடியாக இருட்டுக்கடையை தங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள்.
அவர்கள் குடும்பம் உணவுத் தொழில் செய்து வருவதால் இருட்டுக்க்டையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு என் மகளை வீட்டு வேலைக்காரி போல வைத்துக் கொள்ளத் திட்டமிடுகிறார்கள். அந்தப் பையனுக்கு ஏற்கெனவே வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை மறைத்து அநியாயமாக என் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்து விட்டார்கள். அதைத் தட்டிக் கேட்டால், `நான் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறேன். எனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை வைத்து உங்களை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவேன்' என மிரட்டுகிறார். அதனால் தான் காவல்துறையில் புகார் அளித்தோம்" என்றார்.
மிகப் பிரமாண்டமாக திருமணம் முடிந்து இரண்டு மாதத்திற்குள் வரதட்சணை கொடுமை காரணமாக இருட்டுக்கடை அல்வா குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவனைப் பிரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.