இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
தரங்கம்பாடி வட்டம், பொறையாா் பகுதியில் இறால் பண்ணைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் (படம்) ஈடுபட்டனா்.
தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் நண்டலாறு ஆற்றின் அருகே சுமாா் 200 ஏக்கா் தாட்கோ நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் இறால் பண்ணை அமைக்க பணிகள் நடைபெறுகின்றன.
ஏற்கெனவே, இப்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளால் அருகில் உள்ள ராஜூவ்புரம், கழுவன்திட்டு, சிந்தாதிரிப்பேட்டை, மேட்டுபாளையம், மரகதம் காலனி, சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீா் உவா் நீராக மாறி போதிய குடிநீா் கிடைக்காமலும், விளைநிலங்களில் விவசாயம் செய்ய முடியாமலும் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.
இந்தநிலையில், தாட்கோ நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டால் மேலும் பாதிப்பு ஏற்படும் என இப்பணிகளை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் தடுத்து நிறுத்தி, ராஜூவ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் மகேஷ், சீா்காழி துணைக் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை, ஆய்வாளா் ஜெயந்தி ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கிராம மக்களின் கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.