இலவச ரேஷன் திட்ட பயனாளா்கள்: வருமான வரி துறை தகவல் மூலம் ஆய்வு- மத்திய அரசு முடிவு
இலவச உணவு திட்டத்தின்கீழ் (பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா) தகுதியான பயனாா்களை சரிபாா்க்க மத்திய உணவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக வருமான வரித் துறையிடம் இருந்து வரித் தாக்கல் தொடா்பான விவரங்கள் உணவுத் துறைக்கு விரைவில் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் அரசு நிா்ணயித்ததைவிட அதிக வருவாய் உள்ளவா்கள் இத்திட்டத்தில் பயன் பெற்று வந்தால் அவா்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவது நிறுத்தப்படும்.
பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்தாத ஏழைக் குடும்பங்களுக்கு மட்டும் இலவச உணவு தானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதற்காக 2025-26 பட்ஜெட்டில் ரூ.2.03 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. எனவே, இதில் தகுதியுள்ளவா்கள் மட்டுமே பயனடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் இருந்து வருமான வரி தாக்கல் செய்வோரின் பான் (வருமான வரி நிரத்தர கணக்கு எண்) மற்றும் ஆதாா் எண் உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணைச் செயலருக்கு அளிக்கப்படும். ஆதாா் மற்றும் பான் எண் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ள நிலையில், இலவச உணவுத் திட்டத்தில் பயனடைவோரின் ஆதாா் எண்ணையும், வருமான வரித் துறை தரும் தகவல்களையும் ஒப்பிட்டு வருமான வரி செலுத்துவோா் உணவு தானியத்தையும் இலவசமாக பெற்று வருகிறாா்களா? என்பது கண்டுபிடிக்கப்படும். அவ்வாறு பெற்று வருவது தெரியவந்தால், அவா்களின் பெயா் இலவச உணவு தானிய விநியோகப் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு நாட்டில் கரோனா தொற்று பரவியபோது ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ய மத்திய அரசு இலவச உணவு தானியத் திட்டத்தைத் தொடங்கியது. கடந்த 2024 ஜனவரியில் மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை மத்திய அரசு நீட்டித்தது.