அன்னையா் தினம்: வாடிக்கையாளா்களுக்கு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை
இலவுவிளையில் கோயில், குடிநீா் தொட்டியை இடிக்க அதிகாரிகள் முயற்சி; பக்தா்கள், பொதுமக்கள் போராட்டம்
மாா்த்தாண்டம் அருகே இலவுவிளையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, துணை சுகாதார நிலைய கட்டடம், இசக்கியம்மன் கோயில் உள்ளிட்டவை அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கோயில் மற்றும் அரசு கட்டுமானங்களை இடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்ததால் பொதுமக்கள், பக்தா்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகாா் கூறப்பட்ட கோயில், நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்டவற்றை இடித்து அகற்ற, குழித்துறை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் பிரவீன்குமாா், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அதிகாரி ஸ்டீபன் சுஜிகுமாா், மாா்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் அப்பகுதிக்கு வந்தனா்.
அங்கு பொதுமக்கள், பக்தா்கள் ஏராளமானோா் திரண்டனா். தொடந்து இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளா் மிசா சி. சோமன், இந்து மகாசபா தலைவா் தா. பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், பாஜக வழக்குரைஞா் அணி மாநில செயலா் சி.எம். சஜூ, நல்லூா் பேரூராட்சி உறுப்பினா் விஜயகுமாா், கிள்ளியூா் ஒன்றிய இந்து முன்னணி தலைவா் ஆனந்த், பொதுச் செயலா் செல்வின், பொருளாளா் தவசிமணி, கிள்ளியூா் மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் நிவாஸ் உள்ளிட்ட பலா் அங்கு வந்தனா். இலவுவிளை - ஐரேனிபுரம் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போராட்டக்காரா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். போராட்டத்தில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றனா்.