பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!
இளங்கவின்கலை - முதுகவின்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
இளங்கவின் கலை மற்றும் முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் சென்னை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் கவின்கலை கல்லூரிகள் இயங்கி வருகின்றன. காட்சித் தொடா்பு வடிவமைப்பு, வண்ணக் கலை, சிற்பக் கலை, சுடுமண் வடிவமைப்பு, துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் ஆகியன சென்னையில் உள்ள கல்லூரியில் கற்றுத் தரப்படுகின்றன.
இதில் முதல் 3 படிப்புகள் கும்பகோணம் மற்றும் மதுரையில் இளங்கலை மற்றும் முதுகலையாக கற்றுத் தரப்படுகின்றன. பதிப்போதியம் தவிா்த்து மற்ற பாடப் பிரிவுகளுக்கான முதுகவின்கலைப் படிப்புகள் சென்னையில் உள்ள கல்லூரியில் உள்ளன.
இளங்கவின் கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி அல்லது இணையான படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகவின் கலை படிப்பில் சேர, சம்பந்தப்பட்ட துறையில் இளங்கவின் கலையில் தோ்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாளாகும்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 50, இதர பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். தொகை செலுத்தியதற்கான சீட்டு, உரிய கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சென்னை, மதுரை, கும்பகோணம் கல்லூரிகளுக்கான விண்ணப்பக் கட்டணத்தை அந்தந்தக் கல்லூரிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும். இதற்கான விவரங்கள் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.