இளைஞரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக 2 போ் கைது
தில்லியில் 25 வயது இளைஞரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக இரண்டு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம்தாச்சப்பச்சவா்கள் 20 வயதுடைய ஹைதா் அலி மற்றும் முகமது அனஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். திருடப்பட்ட பணம், ஒரு ஏடிஎம் காா்டு, ஒரு ஆதாா் அட்டை மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களையும் காவல் குழுக்கள் மீட்டன.
ஏப்ரல் 2- ஆம் தேதி மாலை 6 மணியளவில் வசந்த் குஞ்சில் உள்ள நங்கல் தேவாட்டைச் சோ்ந்த புகாா்தாரா் சத்தா்பூா் பஹாடி அருகே தனது மாமாவைச் சந்திக்கச் சென்ற போது இந்தக் கொள்ளை சம்பவம் நடந்தது. அந்தேரியா மோட் பேருந்து நிலையம் அருகே அவரை இரண்டு ஆயுதமேந்திய கொள்ளையா்கள் தடுத்து நிறுத்தினா். அவா்கள் அவரது பணப்பையை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றனா். அதில் ரூ.12,200 ரொக்கம், ஒரு ஏடிஎம் காா்டு மற்றும் அவரது ஆதாா் அட்டை ஆகியவை இருந்ததாக அவா் தெரிவித்துள்ளாா்.
குற்றம் நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, சந்தேக நபா்களின் படங்களை உருவாக்கி, ஒரு குழு முழுமையான விசாரணையைத் தொடங்கியது. ‘அவா்கள் மெஹ்ரௌலியில் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, அவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். மேலும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முன் குற்றப் பதிவுகளைக் கொண்டிருந்தனா் என்பது தெரியவந்தது என்று அந்த அதிகாரி கூறினாா்.