ராயகிரியில் மதுக்கடையை மூடக் கோரி டிச.7 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்
ஈரோடு மாவட்டத்தில் 1,263 மெட்ரிக் டன் வெள்ளை பொட்டாஷ் உரம் இருப்பு
ஈரோடு மாவட்டத்தில் 1,263 மெட்ரிக் டன் வெள்ளை பொட்டாஷ் உரம் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பரவலாக நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐ.பி.எல் நிறுவனத்தின் 1,263 மெட்ரிக் டன் வெள்ளை பொட்டாஷ் உரம் ரயில் மூலமாக திங்கள்கிழமை ஈரோடு வந்தடைந்தது. இதனை, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) கலைச்செல்வி, வேளாண்மை அலுவலா் ஜெயசந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா். வெள்ளை பொட்டாஷ் உரம் சொட்டு நீா் பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, வேளாண்மை உதவி இயக்குநா் கலைச்செல்வி கூறியதாவது:
மாவட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,578 மெட்ரிக் டன்னும், டிஏபி உரம் 1,634 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் உரம் 3,993 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 5,916 மெட்ரிக் டன்னும், சூப்பா் பாஸ்பேட் 1,264 மெட்ரிக் டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்புவைக்கப்பட்டுள்ளன.
மேலும், விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிா் உரங்களைப் பெற்று பயன்படுத்துவதுடன், திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து, அதில் பரிந்துரைக்கேற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி, உரச் செலவை குறைத்து கொள்ளலாம் என்றாா்.