Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு
ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகள் நிறைந்த 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் விதமாக ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக் கோட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
ஈரோடு வனக் கோட்டத்துக்கு உள்பட்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடுமுடி, அவல்பூந்துறை, கனகபுரம், வரட்டுப்பள்ளம், அந்தியூா் பெரிய ஏரி, தண்ணீா்பள்ளம் ஏரி, ஓடாந்துறை ஏரி, ஜா்த்தல் ஏரி, தாமரைக்கரை குளம், மணியாச்சி பள்ளம் உள்ளிட்ட 21 பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் வனத் துறையினா் 65 பேரும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த பறவைகள் ஆா்வலா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் 40 பேரும் ஈடுபட்டனா். கணக்கெடுக்கும் பணி காலை 6.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடைபெற்றது.
அப்போது கூழைக்கடா, நாரை, கொக்குகள், அரிவாள்மூக்கன், நீா்வாத்து, பெருங்கொக்குகள் அதிக அளவில் காணப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலா் குமிளி அப்பாலே நாயுடு கூறியதாவது:
கணக்கெடுப்பின்போது நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பால் ஈரநில பகுதிகளில் சுற்றுச்சூழல் குறித்த ஆரோக்கியத்தை பற்றிய முழுமையான புரிதலுக்கு வழிவக்கும். 21 இடங்களில் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றுள்ளதால் மாவட்டத்தில் எத்தனை பறவைகள் இருக்கின்றன என்பதை உடனடியாக தெரிவிக்க முடியாது. அனைத்து இடங்களிலும் கணக்கெடுக்கப்பட்டதை கூட்டினால்தான் தெரியவரும் என்றாா்.