உ.பி.: மில்கிபூா் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 65% வாக்குப்பதிவு
உத்தர பிரதேசத்தில் மில்கிபூா் பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் 65.35 சதவீத வாக்குகள் பதிவாகின.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது மில்கிபூா் பேரவைத் தொகுதி. இங்கு சமாஜவாதி எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத், கடந்த மக்களவைத் தோ்தலில் ஃபைசாபாத் தொகுதியில் அக்கட்சி சாா்பில் போட்டியிட்டு வென்றாா். அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவை வீழ்த்தி அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இவா் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால் காலியான மில்கிபூா் தொகுதிக்கு புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. ஆளும் பாஜகவின் சந்திரபானு பாஸ்வான், சமாஜவாதியின் அஜீத் பிரசாத் இடையே நேரடி போட்டி நிலவிய இத்தோ்தலில் 65.35 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்காளா்கள் 3.70 லட்சம் போ்.
இடைத்தோ்தலில் கள்ள வாக்குகள் பதிவானதாகவும், அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினாா். அவரது குற்றச்சாட்டை மறுத்துள்ள அதிகாரிகள், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்ாக தெரிவித்தனா். வாக்கு எண்ணிக்கை பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த 2022 பேரவைத் தோ்தலில், அயோத்தி மாவட்டத்தில் மில்கிபூா் தவிர இதர 4 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. அப்போது, மில்கிபூரில் 60.23 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்தொகுதி இடைத்தோ்தல் வெற்றியை இரு கட்சிகளுமே கெளரவப் பிரச்னையாக கருதுவதால் தோ்தல் முடிவுகள் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.