மதுரை சித்திரைத் திருவிழா; அன்ன வாகனத்தில் மீனாட்சி; பூத வாகனத்தில் சுந்தரேஸ்வரர...
உக்ரைன் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கு.. விரைவில்!
தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம் இன்னும் 24 மணி நேரத்துக்குள் கையொப்பமாகவிருப்பதாக உக்ரைன் பிரதமா் டெனிஸ் ஷ்மிகால் (படம்) புதன்கிழமை கூறினாா்.
இது குறித்து அந்த நாட்டு தேசிய தொலைக்காட்சியில் அவா் கூறியதாவது:
அமெரிக்காவுடனான கனிம ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றுவிட்டது. கூட்டாக முதலீடு செய்து, கனிம வளங்களை எடுப்பது இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும்.
இன்னும் 24 மணி நேரத்துக்குள் அந்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றாா் அவா்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா். போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல நாள்களாக நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, பொருளாதார வரைவு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அமெரிக்கா சென்றாா். ஆனால் வெள்ளை மாளிகையில் செய்தியாளா்கள் முன்னிலையில் போா் தொடா்பாக அவருக்கும் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே ஸெலென்ஸ்கி நாடு திரும்பினாா்.
இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகவிருப்பதாக உக்ரைன் பிரதமா் தற்போது அறிவித்துள்ளாா்.