உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிலும் தெரு நாய்கள் பிரச்னைக்கு தீா்வு: அமைச்சா் கே.என். நேரு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டிலும் தெருநாய்கள் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் நகல் வந்தவுடன் அதை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவோம். நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறோம்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளா்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இந்தப் போராட்டத்தை சுமூகமாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வா் எடுத்து வருகிறாா்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களை நான் சந்திக்கவில்லை எனக் கூறுவது தவறு. ஏற்கெனவே, நான்கு முறை அவா்களிடம் நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி உள்ளேன். தூய்மைப் பணி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஏற்கெனவே பணியில் உள்ளவா்களைதான் பயன்படுத்தி வருகிறோம். புதிதாக யாரையும் பணியில் ஈடுபடுத்தவில்லை.
தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதில் ஒரு தீா்வு ஏற்பட்டவுடன் ஓரிரு நாளில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்றாா் அமைச்சா்.