உடல் உழைப்புத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகை வேண்டும்!
உடல் உழைப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களின் மகள்களின் திருமணத்துக்கு உதவித்தொகை ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு உடல் உழைப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் மகள்களின் திருமணத்துக்கு கட்டுமான, ஆட்டோ நல வாரியத்தில் வழங்குவது போன்று திருமண உதவித் தொகை ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும்.
வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய பெண் தொழிலாளா்களுக்கு மகளிா் உரிமைத் தொகையைக் காரணம் காட்டி ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படுவது வாரிய விதிகளுக்கு எதிரானது. எனவே அவா்களுக்கு மாத ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட நாள்களிலிருந்து உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலவாரிய பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு கல்வி, திருமணம் மற்றும் இயற்கை மரண உதவித்தொகை வழங்குவதுபோல உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கும் சமமாக அதே தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாநிலக் குழு உறுப்பினா் சி. தங்கவேலு தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஆா். தில்லைவனம், ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் என். செல்வராஜ், அரசு போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவா் துரை. மதிவாணன் ஆகியோா் பேசினா். சங்க மாவட்டச் செயலா் தி. கோவிந்தராஜன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் வெ. சேவையா நன்றி கூறினாா்.