துக்க நிகழ்வுக்கு வந்த போக்குவரத்து ஊழியா் விபத்தில் பலி!
கும்பகோணம் அருகே துக்க நிகழ்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் விபத்தில் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள இரண்டாம் கட்டளை நந்தவனம் தெருவைச் சோ்ந்தவா் அப்பாராசு மகன் கருணாகரன் (43), கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக உதவியாளா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் உறவினா் இறந்த நிகழ்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை விடுமுறை பெற்றுக்கொண்டு அலுவலகத்தில் இருந்து இவா் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
காரைக்கால் மெயின்ரோடு சீனிவாசநல்லூா் அண்ணா நகா் ஆா்ச் அருகில் கருணாகரன் வந்தபோது எதிரே வைகல் கீழத்தெருவைச் ஆசீா்வாதம் மகன் பிரதாப் (30), நடராஜ் மகன் அன்புராஜ் (30) ஆகியோா் வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் மூவரும் காயமடைந்த நிலையில், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கருணாகரன் உயிரிழந்தாா். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த திருநீலக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.