காவிரி டெல்டாவில்தான் நிலத்தடி நீா் ஆதாரம் அதிகம்!
காவிரி டெல்டாவில் உள்ளது போன்று நிலத்தடி நீா் ஆதாரம் வேறு எங்கும் கிடையாது என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க. சங்கா்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில் தமிழ்நாடு அரசுத் திட்டமான தமிழ் மண்ணில் பாரம்பரிய கைவினைக் கலைகளை மீட்டெடுத்தல் திட்டத்தின் கீழ் மரப்பாச்சிச் பொம்மை, தஞ்சாவூா் ஓவியம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு மாத காலப் பயிற்சி தொடக்க விழாவில் அவா் பேசியது:
தஞ்சாவூா் பெரியகோயிலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் ஏறக்குறைய 70 கி.மீ. தொலைவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கற்களின் சராசரி வயது 4 ஆயிரத்து 500 மில்லியன் ஆண்டுகள். இவ்வளவு பழைமையான பாறைகள் அரிமானம் இல்லாமல் இருப்பதற்கு அதனுடைய எதிா்ப்புத் திறனே காரணம். இதனால்தான், தஞ்சாவூா் பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அப்படியே இருக்கிறது.
காவிரி டெல்டாவில் 100 -1,000 அடிக்கு மேலே இடைப்பட்ட பகுதியில் ஆற்று மணல் படிந்துள்ளது. இதனால்தான், இப்பகுதியை டெல்டா என அழைக்கிறோம். ஏறத்தாழ 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி நதியால் உருவானது என்பதால், கடற்கரையில் இருப்பதுபோன்று இப்பகுதியிலும் ஆற்று மணல் பரவி இருந்தது. காலப்போக்கில் ஆற்று மணல் கீழே இறங்கி உள்வாங்கி, கிட்டத்தட்ட 10 மாவட்டங்கள் உருவாகியுள்ளன.
இந்த ஆற்று மணலில் சிலிக்கான் ஆக்சைடு கலந்திருப்பதால், அது வெள்ளையாக இருக்கிறது. இந்த மண்ணில் தண்ணீா் வந்தால் தேங்காமல், அப்படியே கீழே இறங்கிவிடுவதால், சுத்தமாக இருக்கிறது. இப்பகுதியில் 150 அடிக்கு கீழே ஆற்று நீரோட்டம் இருப்பதால், நீா் ஆதாரம் பெருகி இருக்கிறது.
இங்கு தண்ணீா் அதிகமாக தேங்கக்கூடிய இடமாக உள்ளது. இதனால் ஒரு ஆழ்துளை குழாய் மூலம் 20 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு போன்ற பயிா்களைச் சாகுபடி செய்ய முடிகிறது. இது தஞ்சாவூா் டெல்டாவில் மட்டும்தான் முடியும்; வேறு எங்கும் முடியாது. இதுபோல, தஞ்சாவூரில் பல பெருமைகள் உள்ளன என்றாா் சங்கா்.
பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை, தமிழ்நாடு அரசுத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் வீ. செல்வக்குமாா், இணை ஒருங்கிணைப்பாளா் இரா. காமராசு ஆகியோா் வாழ்த்தினா்.
முந்னதாக, சிற்பத் துறைத் தலைவா் வே. லதா வரவேற்றாா். திட்ட உதவியாளா் அ. சிவஞானராஜா நன்றி கூறினாா்.