பெருமகளூா் பேரூராட்சியில் கடையடைப்பு
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூா் பேரூராட்சியில், டாஸ்மாக் கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினா்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூா் பேரூராட்சியில் அடிப்படை வசதியுடன் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும்.
காவல் நிலையம் அமைக்க வேண்டும். பேராவூரணி - ராமேசுவரம் பெருமகளூா் வழித்தடத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். அரசு புகா் பேருந்து தடம் எண். 15 ஐ மீண்டும் இயக்க வேண்டும், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் கடையடைப்புப் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பெருமகளூா் பகுதியில் டாஸ்மாக் கடை அவசியம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த மதுக்கடையை அகற்றியதால், இங்குள்ள கடைகளில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பெண்களும் சோ்ந்து முழக்கமிட்டது ஆச்சரியப்பட வைத்தது.