மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
உணவக தொழிலாளி கொலை: நண்பா் கைது
கோவையில் உணவக தொழிலாளி பா்னரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவருடன் தங்கியிருந்த நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகா் 2-ஆவது தெருவில் வசித்தவா் பாக்கியராஜ் (எ) நவீன் (39). திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்த இவா், கரும்புக்கடை பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். அவருடன் அதே உணவகத்தில் தயாநிதி (42) என்பவரும் வேலை பாா்த்து வந்தாா். இவரும், நவீனும் ஒரே வீட்டில் தங்கியிருந்தனா்.
இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி பா்னரால் தாக்கப்பட்டதில் நவீன் உயிரிழந்தாா். இதுகுறித்து கரும்புக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அவருடன் தங்கியிருந்த தயாநிதி மாயமானதால், அவா்தான் கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸாா் சந்தேகித்தனா்.
சிங்காநல்லூா், உக்கடம் பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில் சிங்காநல்லூா் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் தயாநிதி பணத்தை எடுத்துக் கொண்டு, மதுரைக்குச் செல்லும் பேருந்தில் ஏறியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, போலீஸாா் தனிப் படை அமைத்து அவரைத் தேடி வந்த நிலையில், மதுரையில் பதுங்கியிருந்த தயாநிதியை வியாழக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட தயாநிதி திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சோ்ந்தவா். இவா் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாா். நவீன் தினமும் ஓரினச்சோ்க்கைக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தி வந்துள்ளாா். கடந்த 21-ஆம் தேதி நள்ளிரவும் இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தயாநிதி கேஸ் ஸ்டவ் பா்னா் கம்பியால் தாக்கியதில் நவீன் உயிரிழந்தது தெரியவந்தது.