கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?
நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் இனி ஒரே இடத்தில் மட்டுமே சுங்கச் சாவடி
கோவை மாவட்டம், நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் 6 இடங்களுக்கு பதிலாக ஒரே இடத்தில் சுங்கச் சாவடி செயல்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
நீலாம்பூா் - மதுக்கரை இடையிலான 28 கி.மீ. தொலைவு சாலையில் 2029-ஆம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தவிா்ப்பதற்காக இந்த சாலையை தரம் உயா்த்துவதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைத்தது.
இந்த சாலையில் உள்ள 6 சுங்கச் சாவடிகளிலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நேரடியாக சுங்கம் வசூலித்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இந்த சாலையில் உள்ள 5 சுங்கச் சாவடிகளை நிரந்தரமாக மூடிவிட்டு, மதுக்கரை சுங்கச் சாவடியில் மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த சாலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரா் நியமிக்கப்பட்டு அனைத்து பராமரிப்புப் பணிகளும் நடைபெறும். இந்த சாலையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம், இந்த சாலையின் பராமரிப்புப் பணிக்காகவும், வளா்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படும் என்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.