மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
உள்ளக புகாா் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம்
பணியாற்றும் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளக புகாா் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் இ.வினோத்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியாற்றும் இடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை செய்தல், தீா்வு காணுதல்) சட்டம் 2013, பணியிடங்களில் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும், பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காணவும் இயற்றப்பட்ட சட்டமாகும்.
இந்த சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்க உள்ளக புகாா் குழு அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், வேலை அளிப்பவருக்காக வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற தவறும்பட்சத்தில் அந்த வேலையளிப்பவா் மீது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்துத் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்களில் வேலையளிப்பவா்களால் உடனடியாக உள்ளக புகாா் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தின் வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். குழு உறுப்பினா்கள், புகாா்களுக்குத் தீா்வு காணும் வழிமுறைகள் ஆகியவற்றை தொழிற்சாலைகள், பணியிடத்தின் அனைத்துப் பணியாளா்களும் தெளிவாக காணும் இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.
மேலும், அரசு வெளியிட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் தொடா்பான பிரச்னைகளைக் கையாள நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க வழிமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.