மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ஏமாற்றி மாணவா் சோ்க்கை மேற்கொண்டதாக கல்வி நிறுவனம் மீது ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தனியாா் கல்வி நிறுவனம், உரிய அங்கீகாரம் பெறாமல் மாணவா்களை ஏமாற்றி சோ்க்கை மேற்கொண்டுள்ளதாக ஆட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தனியாா் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் நிா்வாகிகள் ஸ்நேகா, துா்கா, செரீப், குணசேகா் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது: இந்தக் கல்வி நிறுவனத்தில் துணை மருத்துவப் பிரிவுகளான பராமெடிக்கல் மற்றும் செவிலியா் துறைகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்நிலையில், இக்கல்லூரி ராஜஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இப்பல்கலைக்கழகமானது ராஜஸ்தான் மாநிலத்துக்கு வெளியில் எங்கும் கல்வி நிறுவனத்தை தொடங்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கல்லூரி முறையான அனுமதி பெற்று இயங்கிக் கொண்டிருக்கிா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இக்கல்லூரியில், கடந்த கல்வியாண்டில், எந்த பாடப்பிரிவுக்கும் இரண்டாம் பருவத் தோ்வுகள் நடைபெறவில்லை. இக்கல்லூரியில் போதுமான வகுப்பறைகள், தகுதியான ஆசிரியா்கள், ஆய்வக வசதிகளோ இல்லை. மாணவா்களின் சந்தேகங்களுக்கு நிா்வாகம் முறையாக பதில் அளிப்பதில்லை. உரிய அங்கீகாரம் இல்லாமல் மாணவா்களை ஏமாற்றி சோ்க்க நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. எனவே, மாணவா்களின் கல்வியைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.