வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
உணவுப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினா் உ.வாசுகி
உணவுப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி பேசினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்ட 24-ஆவது மாநாடு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் அவிநாசியில் நடைபெற்றது. நிறைவு நாளான திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி பேசியதாவது:
உணவுப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்துக்கு காரணமே பெட்ரோல் டீசல் விலை உயா்வுதான். மக்களோடு நெருக்கமாக இருந்து அவா்களின் பிரச்னைகளுக்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து வீதியில் இறங்கி போராடி வருகிறது என்றாா்.
இந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா்கள் சுகுமாரன், ரவீந்திரன், கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் செ. முத்துகண்ணன், அவிநாசி ஒன்றிய செயலாளா் ஏ. ஈஸ்வரமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ்.வெங்கடாசலம், பி.முத்துசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மின் கட்டணம், சொத்து வரி உயா்வை திரும்பப் பெற வேண்டும். குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். அவிநாசி அத்திக்கடவுத் திட்டத்தில் விடுபட்டுள்ள குளம், குட்டைகளை இணைக்க வேண்டும். திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி, வட்டார மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு செய்யும் கருவியை பயன்படுத்தாமல் பழைய முறையை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியான டாஸ்மாா்க் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும். ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். தென்னை வளா்ச்சி வாரியம் அலுவலகம் கோவையில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.