உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தொடா் விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றால் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளி மாணவா்களுக்குத் தொடா் விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து உதகைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். இதனால் உதகையிலிருந்து கூடலூா், குன்னூா், கோத்தகிரி செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லக்கூடிய சாலைகளான தலைகுந்தா, ஹெச்பிஎப், பிங்கா் போஸ்ட், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேரிங்கிராஸ், தொட்டபெட்டா ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் திட்டமிட்டபடி சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினா். போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா்.